NATIONAL

மாநிலத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் 60 விழுக்காடு பூர்த்தி- கெஅடிலான் இளைஞர் பிரிவுத் தகவல்

புக்கிட் மெர்தாஜம், ஏப் 17- ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலை எதிர் கொள்வதற்கு ஏதுவாக கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தனது தேர்தல் இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் இதுவரை 60 விழுக்காடு பூர்த்தியடைந்துள்தாக கெஅடிலான் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடாம் அட்லி ஹலிம் கூறினார்.

இந்த தேர்தலின் போது அம்னோ, மசீச மற்றும் மஇகா போன்ற பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து வேலை செய்வதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் சொன்னார்.

ஆறு மாநிலங்களிலும் தேர்தலை எதிர் கொள்வதற்கு ஏதுவாக நாங்கள் இரு மாதங்களுக்கு முன்னரே பணிகளைத் தொடக்கி விட்டோம். அனைத்து மாநிலப் பிரதிநிதிகளுடனும் சந்திப்பையும் நடத்தியுள்ளோம் என அவர்  குறிப்பிட்டார்.

மாநிலத் தேர்தலுக்கான தேவைகள் குறித்து அந்த கூட்டங்களில் ஆராய்ந்தோம். அவற்றை அமல்படுத்துவதற்கான நேரம் இப்போது வந்து விட்டது என அவர் சொன்னார்.

நேற்றிரவு இங்கு கெடிலான் இளைஞர் பிரிவின் பினாங்கு அலுவலகம் மற்றும் மாநில கெஅடிலான் தேர்தல் இயந்திர தொடக்க நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த மாநிலத் தேர்தலில் 30 விழுக்காட்டு வேட்பாளர்கள் இளைஞர் பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத்  தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க கெஅடிலான் இளைஞர் பிரிவு தயாராக உள்ளது. ஆனால் அந்த வேட்பாளர் வெற்றி பெற கூடியவராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்றார் அவர்.


Pengarang :