NATIONAL

டிரெய்லர் லோரி ஓட்ட வெளிநாட்டினருக்குத் தடை- சாலை பாதுகாப்பு மீதான அரசின் அக்கறைக்கு எடுத்துக்காட்டு

கோலாலம்பூர், ஏப் 17- டிரெய்லர் லோரிகளை அந்நிய நாட்டினர்  ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை சாலை பாதுகாப்பு அம்சங்களில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

வெளிநாட்டிருக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான முறையான பயிற்சிகளோ நாட்டின் சாலை பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான புரிதலோ இல்லை என்பதால் அரசாங்கம் இந்த முடிவு மிகவும் பொருத்தமான ஒன்றாகும் என்று மலேசிய சாலை மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் நிக் சலிம் நிக் சாலே கூறினார்.

சாலை விபத்துகள் தொடர்பான நடப்பு தரவுகளைக் கருத்தில் கொண்டு உள்நாட்டினர் சம்பந்தப்பட்ட சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். கனரக வாகனங்களை வெளிநாட்டினர் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பட்சத்தில் சாலை பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் பிரச்சனைகள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர டிரெய்லர் லோரிகள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களைச் செலுத்துவதற்கு அந்நியர்களை அனுமதித்தால் உள்நாட்டினர் வேலை வாய்ப்பினை இழப்பதற்குரிய அபாயம் ஏற்படும் என்றார் அவர்.

ஓட்டுநர்கள் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அந்நிய நாட்டினர் டிரெய்லர் லோரிகளை ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அத்தொழில் துறையினர் வலியுறுத்தி வந்த போதிலும் வெளிநாட்டினர்  அத்தொழிலில் ஈடுபட அரசாங்கம் அனுமதிக்காது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடந்த 11ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :