SELANGOR

பெஸ்தாரி ஜெயாவில் மாநில அரசு நலத் திட்ட விளக்கமளிப்பு நிகழ்வு

பெஸ்தாரி ஜெயா, ஏப் 17- மாநில அரசு வழங்கும் சமூக நலத் திட்டங்கள்
தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டம் நேற்று இங்குள்ள பெஸ்தாரி ஜெயா,
இந்திய சமூக மண்டபத்தில் நடைபெற்றது. ஈஜோக் சட்டமன்றத்
தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவர் என்.செல்வராஜூ இந்த
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பெர்மாத்தாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் கே.பத்மநாபன் மற்றும்
பத்தாங் காலி தொகுதி இந்திய சமூகத் தலைவர் ராஜன் கண்ணன்
ஆகியோரின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பெஸ்தாரி ஜெயா
வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 160 பேர் பங்கு கொண்டனர்.

சிலாங்கூர் அரசின் இல்திஸாம் பென்யாயாங் திட்டத்தில் இடம் பெற்றுள்ள
மருத்துவ உதவி, இலவச பேருந்து சேவை, இன்சான் பொது காப்புறுதி,
இலவச குடிநீர்த் திட்டம், மூத்த குடிமக்களுக்கான உதவி உள்ளிட்ட
பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து பத்மநாபன் மற்றும் ராஜன் கண்ணன்
ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளித்தனர்.

மாவட்ட இலாகா, ஊராட்சி மன்ற நிலையில் பெறக்கூடிய அனுகூலங்கள்
குறித்தும் இந்த சந்திப்பு நிகழ்வில் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும்,
இன்சான் காப்புறுதித் திட்டம், இலவச குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கான
பதிவும் இங்கு நடைபெற்றது.

இது தவிர, இந்த நிகழ்வில் மத்திய அரசின் சமூக நல இலாகா மற்றும்
இ-காசே திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கபட்டதோடு
தகுதி உள்ளவர்கள் அத்திட்டங்களில் பதிவு செய்வதற்கான உதவிகளும்
வழங்கப்பட்டன


Pengarang :