NATIONAL

மானிய விலை சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீடு மாதம் 60,000 டன்னாக நிலை நிறுத்தப்படும்

புத்ரா ஜெயா, ஏப் 18- மானிய விலை சமையல் எண்ணெய்க்கான கோட்டா
ஒதுக்கீடு மாதம் 60,000 மெட்ரிக் டன்னாக தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்
என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது.

இந்த ஒதுக்கீட்டு அளவை மாதம் 40,000 டன்னாக குறைக்கும் திட்டம்
எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சு
தெரிவித்தது.

அறுபதாயிரம் மெட்ரிக் டன் என்பது ஒரு கிலோ எடை கொண்ட ஆறு
கோடி சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளுக்கு இணையானதாகும். வீட்டுத்
தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இது போதுமானதாகும்
என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

மானிய விலை சமையல் எண்ணெய்க்கான கோட்டா ஒதுக்கீடு மாதம்
40,000 மெட்ரிக் டன்னாக குறைக்கப்படும் என வெளியானத் தகவல்களுக்கு
விளக்கம் தரும் வகையில் அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டது.

மானிய விலை சமையல் எண்ணெயின் மாதாந்திர கோட்டா 60,000
மெட்ரிக் டன் என்பது அதிகம் என என சில தரப்பினர் கருதுவதால்
அதனை 40,000 மெட்ரிக் டன்னாக குறைப்பதற்கான சாத்தியத்தை
மறுப்பதற்கில்லை என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமது
யூசுப் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சமையல் எண்ணெயின் விநியோகப் பொறுப்பை மலேசிய செம்பனை
வாரியத்திடமிருந்து அமைச்சு கடந்த 2016ஆம் ஆண்டு எடுத்துக் கொண்டப்
பின்னர் மாதம் 60,000 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை மானிய
விலையில் விற்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.


Pengarang :