SELANGOR

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை முறை உருவாக்கம்

ஷா ஆலம், ஏப் 18- நீர் வளம் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கும்
மக்களின் தேவையை ஈடு செய்வதற்கும் ஏதுவாக ஒருங்கிணைந்த ஆற்று
வடிநில மேலாண்மை முறையை (ஐ.ஆர்.பி.எம்.) மாநில அரசு
உருவாக்கியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் பருவ நிலை
மாற்றத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

தற்போது நாம் பருவநிலை மாற்றத்தை எதிர்நோக்கியுளோம். இந்த
விஷயத்தை நாம் சாதாரணமாக கருதி விட முடியாது என்று அவர்
சொன்னார்.

இந்த ஐ.ஆர்.பி.எம். முறையின் கீழ் போதுமான அளவு நீர் விநியோகம்,
சுத்தமான நீர், வெள்ளத்தை எதிர்கொள்வது மற்றும் சுற்றுச்சூழலை
பாதுகாப்பது ஆகிய நான்கு கொள்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவது
உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு, சுங்கை கிளாங் வடிநில ஒருங்கிணைந்த மேலாண்மைத்
திட்டம் மீதான பட்டறையை முடித்து வைக்கும் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

1999ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத்தின் 46(எ)
பிரிவுக்கேற்ப அனைத்து துறைகள் மற்றும் தரப்பினருக்கான வழிகாட்டித்
திட்டமாக இந்த ஐ.ஆர்.பி.எம். திட்டம் விளங்கும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

இந்த அணுகுமுறையின் வாயிலாக ஆற்று வடிநிலப்பகுதிகளின் நிலை,
பிரச்சனைகள் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கான வியூகங்களை
அடையாளம் காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :