NATIONAL

மித்ரா சிறப்புக் குழுவின் தலைவராக டத்தோ ரமணன் நியமனம்

கோலாலம்பூர், ஏப் 19- மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றப்
பிரிவின் சிறப்பு செயல்குழுத் தலைவராக சுங்கை பூலோ நாடாளுன்ற
உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை நேற்று உறுதிப்படுத்திய பி.கே.ஆர். கட்சியின் தேசிய
தகவல் பிரிவுத் துணைத் தலைவருமான ரமணன், இந்த சிறப்புக் குழு
உறுப்பினர்களாக நால்வர் நியமனம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

செனட்டர் சிவராஜ் சந்திரன் (மஇகா), கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்
வீ.கணபதிராவ் (ஜசெக), சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.
யுனேஸ்வரன் (பி.கே.ஆர்.) மித்ரா தலைமை இயக்குநர் கே.ரவீந்திரன் நாயர்
ஆகிய உறுப்பினர்களுடன் தாம் சந்திப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக
அவர் சொன்னார்.

இந்திய சமூகத்தை சமூக,பொருளாதார ரீதியில் உயர்த்தும் நோக்கில்
இந்த அமைப்பை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடந்த
2013ஆம் ஆண்டு தொடக்கினார். முன்பு இது இந்திய சமூக பொருளாதார
மேம்பாட்டுப் பிரிவு (செடிக்) என அழைக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி
தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செடிக் அமைப்பு கலைக்கப்பட்டு
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கீழ் மித்ரா எனும் பெயரில் மீண்டும்
உயிரூட்டப்பட்டது.

பக்கத்தான் ஆட்சி கவிழ்ந்தப் பின்னர் மித்ரா அமைப்பு ஒற்றுமைத் துறை
அமைச்சின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு பல
கோடி வெள்ளி ஊழல் அம்பலமானதைத் தொடர்ந்து மித்ரா பெரும்
சர்ச்சையில் சிக்கியது.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்த அமைப்பு மீண்டும் பிரதமர் துறையின்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மித்ரா அமைப்புக்கு 10 கோடி
வெள்ளி ஒதுக்கப்படுவதாக இவ்வாண்டு தொடக்கத்தில் 2024ஆம்

ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.


Pengarang :