NATIONAL

பெருநாள் காலத்தில் நீர் வளங்கள் மீது 24 மணி நேர சோதனை- மாநில அரசு நடவடிக்கை

ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாள் காலத்தில் நீர் விநியோகத் தடை
ஏற்படும் அளவுக்கு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பாதிப்பு
ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைளை மாநில அரசு
தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நீர் வளங்கள் மீது 24 மணி நேர சோதனை மேற்கொள்ளப்படும் என்றும்
நீரின் தரம் பாதிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ஹீ லோய் சியான் கூறினார்.

சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட் வடிநிலப் பகுதிகளில்
இடைவிடாத கண்காணிப்பு பணிகளை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர்
நிர்வாக வாரியம் மேற்கொண்டு வரும் என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை செமினி நீர் சேகரிப்பு குளம்
ஆகியவற்றை உள்ளடக்கிய மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டத்தை
அமல் படுத்த மாநில அரசு தயாராக உள்ளதாகவும் வர் குறிப்பிட்டார்.

சுங்கை கோங் மற்றும் சுங்கை செம்பா பகுதிகளில் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரியல் நீர் சுத்திகரிப்பு முறையும் இதில்
அடங்கும் என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களில் அன்றாட நடவடிக்கைகள்
வாயிலாக சேரும் திடக்கழிவுகளை அகற்றுவது மற்றும் தோட்ட, தொழில
துறைக் கழிவுகளைக் கையாளும் விஷயத்தில் அலட்சியப் போக்கை
கடைபிடிக்க வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை கேட்டுக்
கொண்டார்.


Pengarang :