SELANGOR

கிள்ளான் நகராண்மைக் கழகக் சின்னம் வரையும் போட்டி- கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன

ஷா ஆலம், ஏப் 27- கிள்ளான் நகராண்மைக் கழகம் மாநகராகப்
பிரகடனப்படுத்தப்படுவதை முன்னிட்டு சின்னம் மற்றும் கொடி வரையும்
போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பிரதான ரொக்கப்பரிசாக 2,000 வெள்ளியும் ஆறுதல்
பரிசாக ஒன்பது பேருக்குத் தலா 200 வெள்ளியும் வழங்கப்படும் என்று
நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

இப்போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப பாரங்களை
நகராண்மைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பத்திலிருந்து பதவிறக்கம்
செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதி நாள் மே
8ஆம் தேதியாகும். மேல் விபரங்களுக்கு நகராண்மைக் கழகத்தின்
வர்த்தகத் தொடர்பு பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்
தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கூட்டத்தின் போது
அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவரின் உரை கிள்ளான் நகராண்மைக்
கழகத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வரும் நவம்பர் 23ஆம் தேதிவாக்கில் கிள்ளான் நகராண்மைக் கழகம்
மாநகர் அந்தஸ்தைப் பெறும் என்ற எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக
அவர் தமதுரையில் கூறினார்.

மாநகர் மன்ற அந்தஸ்தை அடைவதற்கு தயாராகும் வகையில்
மேம்பாட்டுப் பணிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று அவர்
மேலும் சொன்னார்.

இந்த அரச நகரில் அடிப்படை வசதிகளை குறிப்பாக பழைய கட்டிடங்களை
தரம் உயர்த்துவது நகராண்மைக் கழகம் எதிர்நோக்கும் முக்கிய
சவாலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :