எல் நினோ பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசும் மக்களும் தயாராக வேண்டும்

கோலாலம்பூர், மே 4- அடுத்த மாதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான எல் நினோ பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தணிக்க அரசாங்கமும் மக்களும் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பருவநிலை மாற்றங்களை மலேசியா இதற்கு முன்னர் எதிர் கொண்டுள்ள போதிலும் அதீத பதட்டங்களை தவிர்க்க முன்கூட்டிய தயார் நிலை அவசியமாகிறது என்று சுற்றுச்சூழல் நிபுணரான இணைப் பேராசிரியர் டாக்டர் ஹலிசா அப்துல் ரஹ்மான் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு வரை நாடு 12 முறை எல்நினோ பருவநிலை மாற்றத்தை எதிர் கொண்டுள்ளதை தரவுகள் காட்டுகின்றன. முதல் பருவநிலை மாற்றம் 1951 மற்றும் 1952இல் நிகழ்ந்த வேளையில் மிகவும் மோசமான நிகழ்வு 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தன.

கடந்த 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பெர்லிஸ் சூப்பிங்கில் 40.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஆறுகள் மற்றும் அணைக்கட்டுகளில் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்பதோடு அவசரகாலத் திட்டத்தையும் முன்னெடுக்கவும் நீருக்கு மாற்று வழிகளைத் தேடவும் தயாராக வேண்டும்.

இது தவிர பொது மக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் நீரின் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளையில் செயற்கை மழையை பொழிவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்  அவர் வலியுறுத்தினார்.

மேலும், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ரீதியான அவசர உதவிகள் தயார் நிலையில் இருப்பதையும் தீ ஏற்படும் பட்சத்தில் அதனை அணைப்பதற்கு முன்னேற்பாடுகள் முறையாக செய்யப் பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.


Pengarang :