NATIONAL

மருத்துவர்கள் சிறந்த சேவையை வழங்கி, நோயாளிகளின் தேவைகளைப் பொறுமையுடன் கையாளவும் வேண்டும் – சிலாங்கூர் சுல்தான்

சிப்பாங், மே 9: சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா  அல்ஹாஜ்,  அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் சிறந்த சேவையை வழங்கவும், நோயாளிகளின் தேவைகளைப் பொறுமையுடன் கையாளவும் அறிவுறுத்தினார்.  அதேவேளையில் பொதுமக்களையும் பொறுப்புடன்  நடந்து கொள்ள கேட்டுக் கொண்டார்.

குறிப்பாகக்  குறைந்த சிகிச்சை வசதிகளுடன், சிறு எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்களை கொண்டு இக்கட்டான சூழ்நிலைகளில்,  ஏராளமான நோயாளிகளை கையாளும்  பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் அக்கறையுடனும் பொறுமையுடனும் இருக்குமாறு பொதுமக்களையும் கேட்டு கொண்டார்.

பொது மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து தங்களை அர்ப்பணித்து அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மக்கள் சிறந்த மற்றும் மலிவான சிகிச்சை பெறமுடியும், அதே வேளையில் நிபுணத்துவ சேவைகளும் பெற முடியும், இது ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்தின் தரத்தை மேம்படுத்த பயனுள்ள ஒரு சேவையாகும் என்றார்.

“எனவே, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கவும், தொழில் ரீதியாக நிபுணத்துவத்துடன் செயல்பட  அறிவுறுத்துகிறேன்,” என்றார்.

சிலாங்கூர் சுல்தான், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலனைக் கவனிக்குமாறு அரசாங்கத்திற்கும் உத்தரவிட்டார், ஏனெனில் இது ஒரு உன்னதமான தொழில் மற்றும் அதற்கேற்ப அவர்கள் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


Pengarang :