NATIONAL

அண்ணன் தாக்கி தங்கை மரணம்- கோத்தா கினபாலுவில் நிகழ்ந்த கோரச் சம்பவம்

ஷா ஆலம், மே 9- அண்ணன் தாக்கியதில் தங்கை பரிதாபமாக
உயிரிழந்தார். மனதை உலுக்கும் இந்த துயரச் சம்பவம் கோத்தா கினபாலு,
ஜாலான் சிக்னல் ஹில்லில் நேற்று நிகழ்ந்தது.

இருபத்தைந்து வயதுடைய அந்த இளம் பெண் முகத்தில் பலத்தக்
காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் தரையில் கிடந்ததை அவரின்
தந்தை கண்டதாகக் கோத்தா கினபாலு மாவட்டத் துணைப் போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் கல்சோம் இட்ரிஸ் கூறினார்.

அப்பெண் உடனடியாக இரண்டாம் குயின் எலிசபெத் மருத்துவமனையில்
சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதாகவும் எனினும் சிகிச்சைப் பலனின்றி
நேற்றிரவு 10.30 மணியளவில் உயிழந்து விட்டதாகவும் அவர்
தெரிவித்தார்.

இந்த அடாதச் செயலைப் புரிந்தது அப்பெண்ணின் சொந்த அண்ணன்
என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர்
கூறியதாக கோஸ்மா ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ந்த போது அண்ணன், தங்கை மட்டுமே வீட்டில்
இருந்ததாக குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம் வழி தெரியவருகிறது
என்று அவர் சொன்னார்.

அவ்விரு உடன்பிறப்புகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது
வழக்கம் என்றும் அதனால் இத்தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் எனத்
தாங்கள் கருதுவதாகவும் கூறிய அவர், எனினும், இச்சம்பவத்திற்கான
உண்மை காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய சகோதரன் கைது செய்யப்பட்டு
அவரிடமிருந்து இரு மோதிரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :