NATIONAL

பொழுது போக்கு முகாம்களை உடனடியாகப் பதிவு செய்வீர்- எம்.பி.ஏ.ஜே. வலியுறுத்து

அம்பாங் ஜெயா, மே 9- ம்பாங் ஜெயா வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 30 பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களில் அறுவர் மட்டுமே நகராண்மைக் கழகத்தில் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த 30 பொழுது போக்கு
முகாம் நடத்துனர்களையும் தாங்கள் விரைவில் சந்திக்கவுள்ளதோடு
உத்தரவைப் பின்பற்றி நடக்கும்படி ஆலோசனையும் கூறவுள்ளதாக
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் (எம்.பி.ஏ.ஜே.) டாக்டர் அனி
அப்துல்லா கூறினார்.

விரைந்து வந்து பதிவு செய்யுங்கள். நாங்கள் நல்ல முறையில்
கவனிக்கிறோம். லைசென்ஸ் இன்றி கடையைத் திறந்து வியாபாரம்
செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனால் நமது வியாபாரமும்
விருத்தியாகாது என்று அவர் சொன்னார்.

பதிவு செய்யும் பட்சத்தில் நீங்கள் எங்கு செயல்படுகிறீர்கள் என்று
எங்களுக்குத் தெரியும். ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் எங்கு நிகழ்ந்தது
என்று எங்களுக்கு தெரியும் என்பதோடு விரைந்து வந்து உதவவும்
முடியும். பிரச்சனை ஏற்பட்டால் மட்டும் அரசாங்கத்தைத் தேடும் போக்கு
வேண்டாம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வில் அம்பாங் ஜெயா நகராண்மைக்
கழகத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டப்
பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி மாநிலத்திலுள்ள
அனைத்து பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களும் தங்களின்
நடவடிக்கையை ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்ய வேண்டும் என
மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு இறுதியில் பத்தாங் காலியில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக்
ஃபார்ம் எனும் பொழுது போக்கு முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவைத்
தொடர்ந்து இந்த பதிவு நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்கிறது.


Pengarang :