NATIONAL

தென்மேற்கு பருவமழை மே 15ஆம் தேதி தொடங்குகிறது- மழையின் அளவு குறையும் அபாயம்

கோலாலம்பூர், மே 9- தென்மேற்கு பருவ மழை வரும் மே 15ஆம் தேதி
தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்
காரணமாக நாட்டின் பல இடங்களில் இக்காலக்கட்டத்தில் மழையின்
அளவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவ மழை காலத்தில் வழக்கமாக காற்று குறைவான
ஈரப்பதத்தடன் தென்மேற்கிலிருந்து சீராக வீசும் என்பதோடு
வளிமண்டலமும் சீராக இருக்கும் என்பதால் இக்காலக்கட்டத்தில் மழை
மேகங்கள் உருவாக்கம் காண்பது குறைவாக இருக்கும் என்று மலேசிய
வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி
அப்துல்லா கூறினார்.

இதன் காரணமாக இக்காலக்கட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் மழை
பெய்யும் நாட்களை விட மழை பெய்யாத நாட்களின் எண்ணிக்கை
அதிகமாக இருக்கும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

எனினும், புயல் கோடு உருவாக்கம் காரணமாகத் தீபகற்ப மலேசியா மற்றும்
சபா மாநிலத்தின் மேற்கு கரை பகுதிகளில் அதிகாலை வேளைகளில் இடி
மின்னல் மற்றும் புயலுடன் கூடிய அடை மழை பெய்வதற்குரிய
சாத்தியம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

தென் மேற்கு பருவ மழையின் போது குறிப்பாக ஜூலை முதல்
செப்டம்பர் வரை திறந்த வெளி தீயிடல் சம்பவங்களைக்
கட்டுப்படுத்தாவிட்டால் புகை மூட்டப்பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு
உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :