NATIONAL

விளையாட்டுப் பொருள் வாங்கும் முயற்சி விபரீதத்தில் முடிந்தது- ஆறு வயதுச் சிறுவன் செலுத்திய கார் விபத்தில் சிக்கியது

லங்காவி, மே 10- பாலர் பள்ளியில் படிக்க வேண்டிய ஆறு வயதுச்
சிறுவன் கடையில் விளையாட்டு பொருள் வாங்குவதற்காக தனது மூன்று
வயது தம்பியுடன் காரை சொந்தமாக ஒட்டிச் சென்றுள்ளான்.

எனினும், அந்த கார் வழியில் விபத்துக்குள்ளனதால் அந்த சிறுவனின்
வீரதீரச் செயல் விபரீதமாக மாறி போலீசாரின் விசாரணை
வளையத்திற்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் லங்காவியில் உள்ள ஜாலான் புக்கிட் தாங்காவில்
நேற்றிரவு நிகழ்ந்தது. அச்சிறுவன் செலுத்திய கார் வீட்டிலிருந்து சுமார் 2.5
கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் நேற்றிரவு
பரவலாகப் பகிரப்பட்டது. பெற்றோருக்குத் தெரியாமல் அந்த பாலகன்
காரைச் செலுத்தியுள்ளதை அறிந்து பொது மக்கள் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாயினர்.

நேற்றிரவு 11.15 மணியளவில் சிம்பாங் கென்யும், ஜாலான் புக்கிட்
தங்காவில் இச்சம்பவம் நிகழ்ந்ததை லங்காவி மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி ஷரிமான் அஷாரி உறுதிப்படுத்தினார்.

அந்த காரை ஆறு வயதுச் சிறுவன் செலுத்திய வேளையில் மூன்று
வயதுடைய அவனது தம்பி காரில் உடன் சென்றுள்ளான் என்று அவர்
சொன்னார்.

சுமார் இரண்டரை கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு அந்த கார்
கம்போங் தித்தி சன்வாங் அருகே கட்டுப்பாட்டை இழந்து விளக்கு
கம்பத்தை மோதியதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் காரை ஓட்டிய சிறுவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்ட
வேளையில் பயணியாக வந்த அவனது தம்பிக்குக் காயம் ஏதும்
ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 43வது பிரிவு மற்றும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்
31(1)ஆம் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்
மேலும் தெரிவித்தார்.


Pengarang :