SELANGOR

கோலக் கிள்ளான் தொகுதியில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- மே 20ஆம் தேதி நடைபெறும்

கிள்ளான், மே 11- இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் நோன்புப்
பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும்படி தொகுதி மக்களை
கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வருடாந்திர நிகழ்வு கோத்தா பாயு இமாஸ், பியேர் 8, கிரேவிட்8
எனுமிடத்தில் இரவு 8.00 மணிக்குத் தொடங்கும் என்று அஸ்மிஸாம் ஜமான்
ஹூரி கூறினார்.

இந்த நிகழ்வில் 5,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படும்
வேளையில் பத்தாயிரம் பேருக்காக வாட்டிய ஆட்டிறைச்சி, லெமாங்,
ரெண்டாங், வறுத்த கோழி உள்ளிட்ட உணவு வகைகளை தாங்கள் ஏற்பாடு
செய்துள்ளதாக அவர் சொன்னார்.

ஒவ்வோராண்டும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வை நாங்கள்
நடத்தி வருகிறோம். ஒவ்வொரு நிகழ்விலும் குறைந்தது 7,000 பேர் வரை
கலந்து கொள்வர். இம்முறை விலாசமான மற்றும் வசதியான இடத்தில்
இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதால் வருகையாளர்கள் எண்ணிக்கை
அதிகமாக இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற கோலக் கிள்ளான் தொகுதி நிலையிலான
அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த பொது உபசரிப்புக்கு மேலும் மெருகூட்டும் விதமாக இதில் மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :