SELANGOR

கோலசிலாங்கூரில் சனியன்று நடைபெறும் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், மே 11- இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறும் நோன்புப்
பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும்படி பொது மக்களை
குறிப்பாக கோல சிலாங்கூர் வட்டார குடியிருப்பாளர்களை மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நிகழ்வு கோல சிலாங்கூர்
புக்கிட் பாடோங் பொது மைதானத்தில் இரவு 8.00 மணி முதல்
நடைபெறும் என்று அவர் சொன்னார்.

குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து
கொள்ளுங்கள் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஸ்கோர் மற்றும்
காம்புஸ் வாரிசான் தஞ்சோங் காராங் குழுவினரின் கலைநிகழ்ச்சியும்
இடம் பெறும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இந்த பொது உபசரிப்பில் கலந்து கொள்ளும் பொது
மக்களுக்காக லக்சா, சாத்தோ, கெத்துபாட், லெமாங், ரெண்டாங் மற்றும்
பலவகை பலகாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கோல சிலாங்கூர்
நகராண்மைக் கழகம் கூறியது.

இந்த பொது உபசரிப்பில் இடம் பெறும் அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி
பெறுவோருக்கு கவர்ச்சிகமான மின்சாரப் பொருள்கள் பரிசாக
வழங்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த பொது
உபசரிப்பு நிகழ்வு கடந்த மாதம் 28ஆம் தேதி சிப்பாங்கில் தொடங்கி
வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.


Pengarang :