NATIONAL

கிள்ளானில் சிறுமியின் மரணத்திற்கு வெப்பப் பக்கவாதம் காரணமல்ல- சுகாதார இலாகா விளக்கம்

ஷா ஆலம், மே 12- கிள்ளானில் மாணவி ஒருவர் உயிரிழந்ததற்கு வெப்ப
பக்கவாதம் காரணம் என சமூக ஊடகங்களில் கூறப்படுவதைச் சிலாங்கூர்
மாநிலச் சுகாதார இலாகா மறுத்துள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட
அந்த பத்து வயதுச் சிறுமி கடுமையான இரைப்பை குடல் அழற்சி
நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை பரிசோதனை முடிவுகள்
காட்டுவதாக சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ
டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

அந்த சிறுமிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலன்றி அவர் மே 9 ஆம்
தேதி உயிரிழந்தார். சமூக ஊடகங்கள் வெளியிட்டதைப் போல் அவர்
வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சிலாங்கூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் வெப்பத் தாக்குதல்
காரணமாக உயரிழந்ததாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை
தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக ஷஹாரி கடந்த 10ஆம் தேதி
கூறியிருந்தார்.

அந்த சிறுமி கிள்ளானில் உள்ள ஒரு சுகாதார கிளினிக்கிற்குச் சிகிச்சைக்கு
வந்ததாக கூறப்பட்டது. கடந்த மே 8ஆம் தேதி இரவு உணவுக்குப் பின்னர்
வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கிற்கு அச்சிறுமி
ஆளாகியுள்ளார்.

மறுநாள் சுகாதார கிளினிக்குக்கு கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் கடுமையான இரப்பை குடல்
அழற்சியினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது என அவர் சொன்னார்.

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை
அலட்சியப்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொண்ட அவர், தற்போதைய வறட்சி காலத்தில் இத்தகைய பாதிப்புகள் உடலில்
நீர்ச்சத்து பற்றாக்குறைக்குக் காரணமாகக் கூடும் என எச்சரித்தார்.


Pengarang :