NATIONAL

சட்டமன்றம் கலைப்பு- சிலாங்கூர் சுல்தானுடன் மந்திரி புசார் அடுத்த மாதம் சந்திப்பு

கோம்பாக் மே 15- மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை மந்திரி புசார் அடுத்த மாதம் சந்திக்க விருக்கிறார்.

இவ்விவகாரம் தொடர்பில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா எடுக்கும் முடிவு குறித்து அச்சந்திப்புக்குப் பின்னர் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுல்தான் அவர்கள் ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற செல்வதற்கு முன்பாக இந்த சந்திப்பை நடத்த விருக்கிறோம். அவர் ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற  சென்று விட்டால் நாம் எதுவும் செய்ய இயலாது. காரணம், மாநில சட்டமன்றம்  ஜூன் 25ஆம் தேதி இயல்பாக கலைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அறிவிப்பு வரும் போது நாம் சுல்தான் அவர்களைச் சந்திப்போம். மே மாதம் முடிந்து ஜூன் மாதம் வரை கால அவகாசம் உள்ளதால் பொருத்தமான தருணத்திற்காக நாம் காத்திருக்கிறோம் என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பாக தாங்கள் பேச்சு நடத்த தொடங்கி விட்ட போதிலும் சுல்தானின் முடிவே இறுதியானது என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை முன்னிட்டு இங்குள்ள தாமான் ஸ்ரீ கோம்பாக்,  டேவான் பெரிங்கினில் நடைபெற்ற ரெவாங் செகம்போங் எனும் கூட்டு சமையல் திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜூன் மாதத்தின் இறுதி இரு வாரங்களில் சட்டமன்றங்களை கலைப்பதற்கு ஆறு மாநில அரசுகள் இணக்கம் தெரிவித்துள்ளது அமிருடின் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தனது பேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானு ஆகிய மாநில அரசுகளின் ஐந்தாண்டு தவணைக் காலம் இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருவதால் அம்மாநிலங்களில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


Pengarang :