NATIONAL

பத்தாங் காலி தொகுதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பில் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்

ஷா ஆலம், மே 15- பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியின்
ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது
உபசரிப்பில் மூவினங்களையும் சேர்த்து சுமார் 3,000 பேர் கலந்து
கொண்டனர்.

உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசா சமூக மண்டபத்தில் காலை 11.00
மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த பொது உபசரிப்பு
நடைபெற்றதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது
கூறினார்.

பத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நேற்று
நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட
புக்கிட் செந்தோசா, புக்கிட் பெருந்தோங், பண்டார் சுங்கை புவாயாவைச்
சேர்ந்த மூவாயிரம் பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று
அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

பெருந்தொற்று பரவல் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாகப் பொது
உபசரிப்புகள் நடைபெறாமலிருந்த நிலையில் நோன்புப் பெருநாளை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு பொதுமக்களும்
தலைவர்களும் ஒன்று கூடி கலந்துரையாடுவதற்குரிய வாய்ப்பினை
ஏற்படுத்தியது என்றார் அவர்.

இந்த நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்து கொண்ட 200 சிறார்களுக்குப்
பெருநாள் பண அன்பளிப்பு வழங்கப்பட்டதோடு அதிர்ஷ்டக்குலுக்கில்
வெற்றி பெற்ற பத்து பேருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன என அவர்
மேலும் சொன்னார்.


Pengarang :