SELANGOR

வெள்ளம், வறட்சியின் போது பயன்படக்கூடிய 100 குளம் மற்றும் ஏரிகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது

ஷா ஆலம், மே 16- மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டத்தின் கீழ்
வெள்ளம் மற்றும் வறட்சியின் போது பயன்படக்கூடிய சுமார் 100 குளங்கள்
மற்றும் ஏரிகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

எதிர்பாராத சூழ்நிலைகளில் நீர் தேவையை ஈடு செய்யக்கூடிய நீர்
சேகரிப்பு மையங்களாக அந்த குளங்களும் ஏரிகளும் செயல்படும் என்று
அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.

மாநிலம் முழுவதும் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள 3 கோடியே
40 லட்சம் கனமீட்டர் நீர் மழை இல்லாத சூழ்நிலையில் மூன்று மாதங்கள்
வரை மாநில மக்களின் நீர்த் தேவையை ஈடுசெய்யப் பயன்படும் என்று
அவர் சொன்னார்.

இத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ள முதல் மாநிலமாகச் சிலாங்கூர்
விளங்குகிறது. எதிர்காலத்தில் நீர் விநியோகத்திற்கு உத்தரவாதம்
அளிக்கும் நோக்கில் இவ்விவகாரத்தை நாங்கள் விரிவான மற்றும்
ஒருங்கிணைந்த நிலையில் அணுகுகிறோம் என்றார் அவர்.

டிவி ஒன்றில் இன்று காலை ஒளிபரப்பான செலாமாட் பாகி மலேசியா
நிகழ்வுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்ட அமலாக்கத்திற்கு 2023ஆம்
ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 33 கோடியே 20 லட்சம் வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பத்து கோடி வெள்ளி நீர் சுத்திகரிப்பு
மையங்களில் ஏற்படக்கூடிய நீர் மாசுபாடு பிரச்சனைகளைக் களைவதற்கு
பயன்படுத்தப்படும்.


Pengarang :