NATIONAL

வெப்ப சீதோஷ்ண நிலையால் நேற்று வரை 15 பேர் பாதிப்பு- ஒருவர் மரணம்

கோல நெருஸ், மே 17- நாட்டில் வெப்ப சீதோஷ்ண நிலை காரணமாக
ஏற்படக்கூடிய பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அதனைக் கையாளும்
திறனையும் சுகாதார அமைச்சு கொண்டுள்ளதாக அமைச்சர் டாக்டர்
ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

நேற்று வரை வெப்ப சீதோஷ்ண நிலை தொடர்புடைய 15 சம்பவங்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட வேளையில் ஒரு மரணச் சம்பவம்
மட்டுமே பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த 15 சம்பவங்களில் நான்கு வெப்பப் பக்கவாதம் சம்பந்தப் பட்டவையாக
இருந்த வேளையில் ஐந்து சம்பவங்கள் வெப்ப சோர்வு மற்றும் ஆறு
சம்பவங்கள் வெப்ப பிடிப்புடன் தொடர்புடையவையாக இருந்தன என்று
அவர் குறிப்பிட்டார்.

இந்த பாதிப்பு காரணமாக 11 வயதுடைய சிறுமி மட்டுமே உயிரிழந்த
வேளையில் மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளனர்
என்று அவர் கூறினார்.

நிலைமை  தற்போது வரை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போதைக்கு கடுமையான நடவடிக்கைகள் தேவையில்லை. தேவையான சிகிச்சைகளை
வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளது. மேலும் இந்த வெப்ப
வானிலை விவகாரத்தில் விழிப்புடன் இருக்கும்படி மாநில மற்றும்
மருத்துவமனை சுகாதார இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற கிழக்கு மண்டலத்திற்கான சுகாதார வெள்ளை
அறிக்கை தொடர்பான மக்கள் கருத்து கேட்பு நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் எல் நினோ பருவநிலை மாற்றம்
காரணமாக அவசர காலத்தை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம்
இல்லை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட்
ஹமிடி கூறியிருந்தது தொடர்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :