SELANGOR

கோல லங்காட்டில் வெ.50 லட்சம் செலவில் மின்சுடலை- கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்

பந்திங், மே 17- கோல லங்காட் மாவட்டத்தில் மின்சுடலை நிர்மாணிப்புப்
பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. பந்திங், சுங்கை புவாயா
செர்டாங் பிலாஸில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்து
இடுகாட்டு நிலத்தில் இந்த மின் சுடலை அமைக்கப்படவுள்ளதாகக் கோல
லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் ஹரிதாஸ் ராமசாமி கூறினார்.

சுமார் 50 லட்சம் வெள்ளி செலவிலான இந்த திட்டத்திற்கு டெண்டர்
கோரப்பட்டுள்ள நிலையில் இதன் கட்டுமானப் பணிகள் மாநிலத்
தேர்தலுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்படும் என அவர் சொன்னார்.

இப்பகுதியில் மின் சுடலை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தி தாம் பல முறை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
மற்றும் நகராண்மைக் கழகத்திடம் முறையிட்டதன் விளைவாக
இத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த மின்சுடலையின் நிர்மாணிப்புக்கான செலவுகளை நகராண்மைக்
கழகம் ஏற்றுக் கொள்ளும். நிர்மாணிப்புக்குப் பின்னர் மின்சுடலையை
நிர்வகிக்கும் பொறுப்பையும் நகராண்மைக் கழகமே ஏற்றுக் கொள்ளும்
என்றார் அவர்.

இப்பகுதியில் மின் சுடலையை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு
கடந்த 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த போதிலும்
அத்திட்டம் முழுமை பெறாமல் போய்விட்டது என்றார் அவர்.


Pengarang :