NATIONAL

மித்ரா உதவி நிதித் திட்டத்திற்கான விண்ணப்ப நாள் மே 28 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், மே 18- கடந்தாண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் மித்ராவுக்கு ஒதுக்கீடு செய்திருக்கும் 10 கோடி வெள்ளி மானியம்,  இந்திய மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாகவும் தீவிரமாகவும் இருக்கின்ற மித்ரா சிறப்புப் பணிக்குழு, கிட்டத்தட்ட வெ.4 கோடி மதிப்பிலான மூன்று உதவித் திட்டங்களை அறிவித்து தன் களப்பணியைத் தொடங்கியிருக்கிறது.

பி40 பிரிவைச் சேர்ந்த அரசாங்கப் பொது பல்கலைக்கழக இந்திய மாணவர்களுக்கு ஒரு முறை வெ.2000, தமிழ் பாலர் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் வெ.200, சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக மாதந்தோறும் வெ.800 என சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாகவே உதவி நிதியை சேர்க்கும் நடைமுறையை மித்ரா அறிவித்துள்ளது.

இடைத்தரகர்கள் இன்றி இணையம் வாயிலாக விண்ணப்பித்து மானியத்தைப் பெற்றுக் கொள்ளும் இந்த நடைமுறையின் வழி இந்திய சமூகத்தைச் சேர்ந்த 15,400 பேர் நேரடியாகப் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான மித்ராவின் மானிய விண்ணப்பம் கடந்த மார் 20ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது. இந்த விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

எனினும், நாடு முழுவதும் உள்ள இன்னும் அதிகமான அரசு சார்பற்ற அமைப்புகளும் இதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கில், விண்ணப்பத்துக்கான இறுதி நாள் மே 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த புதிய அறிவிப்பை செய்யும் போது, கிட்டத்தட்ட 400 விண்ணப்பங்களை இணையம் வழி மித்ரா பெற்றிருந்தது. தற்போதைய நிலவரப்படி இதுவரை சேர்ந்திருக்கும் விண்ணப்பங்கள் 1300-ஐ தாண்டியிருப்பதாக நம்பப்படுகிறது.


Pengarang :