NATIONAL

பேராக் விளையாட்டரங்கில் கலவரத்தில் ஈடுபட்டதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, மே 23- பேராக் மற்றும் சிலாங்கூர் குழுக்களுக்கிடையே கடந்த
சனிக்கிழமை இங்கு நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் போது கலவரத்தில்
ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட மூன்று ஆடவர்களுக்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 2,000 வெள்ளி அபராதம் விதித்தது.

தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை முகமது அய்மான்
பிர்டாவு பட்ருள் இஷாம் வயது 21), முகமது அமிருள் அஸ்னில் மாட்
பண்டிர் (வயது 26), முகமது ஹய்யான் சுஃபி முகமது சப்ரி (வயது 20)
ஆகிய மூவரும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்
எஸ்.புனிதா இந்த தீர்ப்பை வழங்கினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அம்மூவரும் மூன்று மாத
சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்
உத்தரவிட்டார்.

கடந்த சனிக்கிழமை இரவு 9.17 மணியளவில் பேராக் அரங்கில் கூட்டாகக்
கலவரத்தில் ஈடுபட்டதாக அம்மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான
சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியிருந்தனர்.

இதனிடையே, இதே குற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 17
வயதுடைய இளைஞர் ஒருவரும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்
கொண்டார். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் 1,500
வெள்ளி ஜாமீனில் அந்த இளைஞரை விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதி
வழங்கினார்.

அந்த பதின்மை வயது இளைஞர் தொடர்பான சமூக நலத் துறையின்
நன்னடத்தை அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கு
விசாரணையை மாஜிஸ்திரேட் ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :