NATIONAL

வாகனத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ வீரர் உள்பட மூவர் கைது

கோலாலம்பூர், மே 24- கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக் மற்றும் நெகிரி
செம்பிலானில் வாகனங்களைத் திருடி வந்ததாக நம்பப்படும் அரச
மலேசிய கடற்படையின் முன்னாள் வீரர் உள்பட மூவரைப் போலீசார்
கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 13ஆம் தேதி இருவேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கைகளில் 24 முதல் 40 வயது வரையிலான
அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக செந்துல் மாவட்டப் போலீஸ்
தலைவர் ஏசிபி அகமது அகமது சுக்காமோ முகமது ஜஹாரி கூறினார்.

கடந்தாண்டு முதல் தீவிரமாக செயல்பட்டு வந்த இந்த கும்பல் தாங்கள்
திருடும் வாகனங்களை தாய்லாந்தில் குறைந்த விலையில் விற்பதை
வாடிக்கையாகக் கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக
அவர் சொன்னார்.

இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சசி நேவி
(வயது 40) என்ற நபர் பேராக், கம்போங் காஜாவில் கைது செய்யப்பட்ட
வேளையில் மேலும் இருவர் ஈப்போ மற்றும் நீலாயில் பிடிபட்டனர் என்று
அவர் தெரிவித்தார்.

இந்த கும்பல் ஹோண்டா மற்றும் பஜேரோ ரக வாகனங்களைக் குறி
வைத்து கொள்ளையிட்ட வந்ததாக இங்குள்ள மாவட்டப் போலீஸ்
தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
கூறினார்.

இக்கும்பலிடமிருந்து இரு கார்கள், கார்களைத் திருடுவதற்குப்
பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் போலி எண் பட்டைகளும்
கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்ட இந்த கும்பல் உறுப்பினர்கள்
இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :