NATIONAL

நெறிகளுக்கு முரணான சுமார் 1,500 பதிவுகள் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர், மே 25- நிர்ணயிக்கப்பட்ட சமூக நெறிமுறைகளை மீறியதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 1,565 பதிவுகள் சமூக ஊடகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) சமூக ஊடகச் சேவை வழங்குனர்களின் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த பதிவுகள் நீக்கப்பட்டதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

போலிச் செய்திகள் மற்றும் 3ஆர் எனப்படும் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான பதிவுகள் சம்பந்தப்பட்ட புகார்களை கையாள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டது முதல் உணர்ச்சிகரமான மற்றும் சினமூட்டக்கூடிய 195 பதிவுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 80 விழுக்காடு நீக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

இந்த பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது முதல் எம்.சி.எம்.சி. மிகவும் ஆக்ககரமான முறையில் செயல்பட்டு வருவதோடு  பொய்ச் செய்திகளையும் அடையாளம் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் நேற்று 2023ஆம் ஆண்டு (மலேசிய ஒளிபரப்புத் துறை)(உறுதிப்படுத்துதல்) கட்டண மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :