NATIONAL

இது வெப்பக் காலமாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடிக்க அதிக நீரைக் கொடுப்பது ஆபத்தானது 

கோலாலம்பூர், மே, 25: ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் நீர் கொடுப்பது அல்லது பாலில் நீர் கலந்து வழங்குவது போன்றவை அவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போதைய வெப்ப காலத்தில் அனைவரும் அதிக அளவில் நீரை அருந்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் சமயத்தில் ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடிக்க அதிக நீரை கொடுப்பது ஆபத்தாகும்  என  எச்சரிக்கிறார்  உணவுப் பிரிவின் அறிவியல் அதிகாரி வினோதினி சச்சூ.

   ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீரகம் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பதால் அதிக அளவில் நீரை கொடுப்பது அவர்களின் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்.

மூளை பாதிப்பு, சுயநினைவு இழப்பு, வலிப்பு போன்றவை ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்து.  அதிக அளவில் நீரை குடிக்க கொடுப்பது, அவர்களை மரண  அபாயத்திற்கு  இட்டு செல்ல நேரிடலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவைப்படும் சமயத்தில் அவர்களுக்கு நீரை வழங்குவதன் வழி அக்குழந்தைகள் சரியாக பால் குடிக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு. மேலும், இதனால் தாய்மார்களுக்கு பால் சுரப்பது குறைந்து அவர்கள் தங்களின் குழந்தைகளுக்குப் போதிய அளவில் பால் கொடுக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படும்.

இதன் விளைவு குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற எடை யில் இருக்க மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், அதிக அளவில் நீரைக் குடிப்பதால் குழந்தைகளுக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில் கிடைக்காது என வினோதினி குறிப்பிட்டார்.


Pengarang :