NATIONAL

போர்ட்டிக்சனில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 37,570 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்

சிரம்பான், மே 26- உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சின் நெகிரி செம்பிலான் பிரிவு போர்ட்டிக்சன், கம்போங் சுங்கை
நிப்பாவில் நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில்
37,570 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கையில் 114,755 வெள்ளி மதிப்பிலான இரு
டேங்கர் லோரிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர்
முகமது ஜாஹிர் மஸ்லான் கூறினார்.

செம்பனைத் தோட்டத்தின் திறந்த வெளியில் உள்ள அந்த இடத்தில்
மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் இரு எண்ணெய் டாங்கிகளோடு
இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் இரு டேங்கர் லோரிகளும்
காணப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் காணப்படவில்லை எனக் கூறிய அவர்,
அமலாக்கப் பிரிவினரின் வருகையை அறிந்து அங்கிருந்தவர்கள் ஓடி
மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இரு டாங்கிகள் மற்றும் டேங்கர்
லோரிகளில் டீசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் சோதனை
மேற்கொண்ட போது ஒரு லோரியிலிருந்து மற்றொரு லோரிக்கு டீசலை
மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றார் அவர்.

இந்த சம்பவம் தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச்
சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :