NATIONAL

எறும்புகள் சூழ்ந்த நிலையில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

ஈப்போ, ஜூன் 1: நேற்று தைப்பிங்கில் உள்ள தாமான் கோத்தா வீரா பேருந்து
நிலையத்தில் பெட்டி ஒன்றில் எறும்புகள் சூழ்ந்த நிலையில் ஆண் குழந்தை
கண்டெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் காரின் பானெட்டில் இருந்து பொருட்களை எடுப்பதற்காக
வாகனத்தை நிறுத்திய பெண் ஒருவர் துண்டின் மூலம் சுற்றப்பட்டிருந்த அக்குழந்தையைக்
கண்டுபிடித்தார் எனத் தைப்பிங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம்
அப்துல்லா ஹமிட் கூறினார்.

அந்த பெண் தனது காரிலிருந்து இறங்கியபோது பேருந்து நிலையத்தில் குழந்தை அழும்
சத்தம் கேட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அக்குழந்தை மேல் சிகிச்சைக்காகத் தைப்பிங் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டதாகவும், குழந்தை ஆரோக்கியமாகவும், 2.62 கிலோகிராம் எடையுடன்
இருப்பதாகவும் மருத்துவர் கண்டறிந்தார்.

மருத்துவப் பரிசோதனையில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதாகவும்
மற்றும் உடலில் நீர் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிய வந்தது. அதற்காகச்
சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்டதாக ரஸ்லாம் கூறினார்.

குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது மற்றும் பிறந்த குழந்தைகளின்
தீவிரச் சிகிச்சை பிரிவில் (NICU) இன்னும் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்று அவர்
கூறினார்.

குழந்தையைக் கைவிட்ட சந்தேக நபரைக் காவல் துறையினர் தேடி வருவதாகவும்,
குழந்தையின் பிறப்பை மறைக்கும் குற்றவியல் சட்டத்தின் 317 வது பிரிவின் கீழ்
வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரஸ்லாம் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :