NATIONAL

சங்கங்களுக்கு உதவி வழங்கத் தஞ்சோங் சிப்பாட் தொகுதி வெ.40,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 6- தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றத் தொகுதியில் உள்ள
சங்கங்களுக்கு உதவும் நோக்கில் 40,000 வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

சங்கங்களின் நிர்வாகம், சமூக நலன் மற்றும் நலத் திட்டங்களுக்காக
இவ்வாண்டு தொடங்கி இந்த நிதி வழங்கப்பட்டு வருவதாக தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

உதவி தேவைப்படும் சங்கங்களுக்கு உதவுவதற்காக நாங்கள்
ஒவ்வோராண்டும் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். உதாரணத்திற்குத் தஞ்சோங்
சிப்பாட் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சொக்சோ எனப்படும்
சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தில் சந்தா செலுத்துவதற்கு நாங்கள்
உதவியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, இத்தொகுதியிலுள்ள பள்ளிவாசல்கள், கிராம மேம்பாட்டு
நிர்வாக மன்றம், பந்திங் மாவட்டப் போலீஸ் தலைமையகம்
ஆகியவற்றுக்கும் நிதியுதவி வழங்கியுள்ளோம் என அவர் சொன்னார்.

மேலும், மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு
நிதியுதவி, பூர்வக்குடியினருக்கான விளையாட்டு விழாவுக்கு நன்கொடை
என பல்வேறு திட்டங்களுக்கு உதவி நல்கியுள்ளோம் என அவர்
தெரிவித்தார்.

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் தொடர்ந்து சேவையாற்றுவதற்குரிய
வாய்ப்பினை மக்கள் வழங்கினால் தொகுதியில் தொடர்ந்து சேவையை
வழங்க தாங்கள் தயாராக உள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான
அவர் கூறினார்.


Pengarang :