NATIONAL

மின் சிகிரெட் திரவத்தை விழுங்கிய 2 வயது குழந்தைக்கு நிக்கோடின் விஷப் பாதிப்பு

கோலாலம்பூர், ஜூன் 6- மின் சிகிரெட் கருவியிலுள்ள திரவத்தை
விழுங்கியதால் ஏற்பட்ட கடுமையான நிக்கோடின் விஷ பாதிப்பு
காரணமாக இரண்டு வயது பெண் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிரச்
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட
அக்குழந்தைக்குச் செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுவதால்
தெமர்லோ, சுல்தான் அமாட் ஷா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
சிகிச்சையின் போது அக்குழந்தைக்கு இரு முறை வலிப்பு ஏற்பட்டது.

தற்போது அக்குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளதோடு சுயமாகச்
சுவாசிக்கவும் முடிகிறது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

எந்தவொரு நோய்ப் பின்னணியும் கொண்டிராத அக்குழந்தை திடீரென
கடுமையான இருமல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறலுக்கு ஆளானதையும்
அதன் அருகில் மின் சிகிரெட் கிடப்பதையும் அக்குழந்தையின் தாத்தா
கண்டுள்ளார்.

அந்த மின் சிகிரெட்டில் உள்ள நிக்கோடின் திரவத்தை அக்குழந்தை
விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என அமைச்சு அந்த
அறிக்கையில் தெரிவித்தது.

அக்குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில்
அளவுக்கு அதிகமாக நிக்கோடின் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தையின் அருகே கண்டு பிடிக்கப்பட்ட மின் சிகிரெட்டும்
சோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


Pengarang :