SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றப் பகுதியில் சாலைகள், வடிகால்களைத் தரம் உயர்த்த மாநில அரசு வெ.2.1 கோடி மானியம்

ஷா ஆலம், ஜூன் 7- ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குட்பட்ட பகுதிகளில்
சாலைகள் மற்றும் வடிகால்களைத் தரம் உயர்த்த மாநில அரசு 2
கோடியே 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்த நிதி ஒதுக்கீட்டில் 1 கோடியே 15 லட்சம் வெள்ளி மாநகர் மன்றத்தின்
அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 1,600 கிலோ மீட்டர் சாலைகளை
மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலம் டத்தோ
பண்டார் கூறினார்.

மேலும் 50 லட்சம் வெள்ளி சாலை விளக்குகளுக்கான மின் இணைப்பு
கேபிள்களை மாற்றுவதற்கும் 10 லட்சம் வெள்ளி கால்வாய்களைச் சுத்தம்
செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்று டாக்டர் நோர் புவாட் ஹமிட்
கூறினார்.

மாரிஸ் எனப்படும் மலேசிய சாலை தகவல் தரவு முறையின் வாயிலாக
அந்த 2 கோடியே 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக்
கூறிய அவர், நேற்று வழங்கப்பட்ட பணி ஒப்பந்த கடிதங்களைப் பெற்ற
குத்தகையாளர்கள் சம்பந்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வர்
என்றார்.

நேற்று இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் நடைபெற்ற
குத்தகையாளர்களுக்கு டெண்டர் ஒப்பந்த கடிதங்களை வழங்கும் நிகழ்வு
மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் கலந்துரையாடலில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

இந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு 31 குத்தகையாளர்களுக்குப்
பணி ஒப்பந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் நோர் புவாட் கூறினர்.


Pengarang :