NATIONAL

முதலாவது சிலாங்கூர் திட்டம் மாநிலப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், மக்கள் நலன் காக்கும்

சுபாங் ஜெயா, ஜூன் 7-  மாநிலத்தின் அடுத்த ஐந்தாண்டு கால வளர்ச்சிக்கான கட்டமைப்பாக விளங்கும் முதலாவது சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட  எதிர்கால இலக்கைத் தீர்மானிக்கும் நோக்கிலான இத்திட்டம் தொழில் முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதுடன் மாநிலத்தில் வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். ஆர்.எஸ்.-1 திட்டம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

இதன்வழி சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் பொருளாதார வளர்ச்சி மண்டலம் , தெற்கு சிலாங்கூரில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதி (இட்ரிஸ்)மற்றும் வடமேற்கு சிலாங்கூரில் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி (சாப்டா ) ஆகியவற்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சாப்டா திட்டமிடல் என்பது சிலாங்கூர் மற்றும் நாட்டில் விவசாயத் துறை மற்றும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியாகும் .

இந்த நடவடிக்கையானது இறக்குமதி செய்யப்படும் உணவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று நேற்றிரவு சன்வே ரிசார்ட் ஹோட்டலில் நடந்த சிலாங்கூர் முதலீட்டாளர் பாராட்டு விழாவில்  உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளுக்கு ஏற்ப இந்த வளர்ச்சித் திட்டத்தில் இலக்கவியல் மயமாக்கல் முதன்மைப்படுத்தப்படும்  என்று அமிருடின் கூறினார் .

இந்நடவடிக்கை நிர்வாகத்தை மேலும் எளிதாக்கும் என்பதோடு சிறந்த வணிக செயல்முறைக்கும் உத்தரவாதம் அளிக்கும். இந்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் நலன் மற்றும் மேன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் உள்ளன என்றார் அவர்.

2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை அளிக்கும் மாநிலத்தின் இலக்கை அடைவதோடு, மக்களின் நல்வாழ்வுக்கான நிலையான மற்றும் நீடித்த பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலாவது சிலாங்கூர் திட்டம் அறிவிக்கப்பட்டது.


Pengarang :