NATIONAL

காணாமல் போன நகைகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது- ரோஸ்மா திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன் 7- லெபனான் நாட்டைச் சேர்ந்த மொத்த நகை
வியாபாரி தமக்கு அனுப்பிய கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள 43
நகைகள் காணாமல் போனதற்குத் தாம் பொறுப்பேற்க முடியாது என்று
டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

போலீசார் அல்லது மலேசிய அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் மூலம்
மீட்கப்பட் நகைகளில் காணாமல் போனதாகக் கூறப்படும் 43 நகைகளின்
ஒன்று இருப்பதன் அடிப்படையில் அவர்கள் வசம் அந்நகைகள் இருப்பது
உண்மையானதாகவும் நம்பகத்தன்மைக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது
என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவியான
அவர் வாக்குமூலம் ஒன்றில் சொன்னார்.

அந்த நகைகள் காணாமல் போனதற்கு நான் காரணமல்ல. அந்த நகைகள்
அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருந்தேன். அவற்றை போலீசார்
பறிமுதல் செய்து உடன் கொண்டுச் சென்றனர்.

ஆகவே, கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள அந்த நகைகளை நான்
வைத்திருப்பது சாத்தியமற்றது என்பதோடு நாட்டை விட்டு வெளியேறவும்
நான் அனுமதிக்கப்படவில்லை என்று தனது வழக்கறிஞர்களான ரெஸா
ரஹிம் மற்றும் ராஜீவன் மூலம் தாக்கல் செய்த தற்காப்பு மனுவில் அவர்
தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டை தளமாக கொண்ட குளோபல் ரோயல்டி டிரேடிங் நிறுவனம்
ரோஸ்மாவுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட 43 நகைகள் தொடர்பான
ஒப்பந்தத்தை மீறியதற்காக 1 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க
டாலரை (6 கோடியே 74 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி) ரோஸ்மா
இழப்பீடாக வழங்க வேண்டும் என தனது வழக்கு மனுவில் அந்நிறுவனம்
கோரியுள்ளது.


Pengarang :