NATIONAL

ஷா ஆலம் செக்‌ஷன் 18, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு நிலம்- உறுதிக் கடிதத்தை ரோட்சியா வழங்கினார்

ஷா ஆலம், ஜூன் 12- இங்கு செக்‌ஷன் 18இல் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி
விநாயகர் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 10,000 சதுர அடி நிலம் உறுதி
செய்யப்பட்டு அதற்கான அங்கீகாரக் கடிதம் நேற்று வழங்கப்பட்டது.

நேற்று இங்குள்ள ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்
தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும்
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருமான ரோட்சியா இஸ்மாயில் இந்த
நிலத்திற்கான உறுதிக் கடிதத்தை ஆலயத் தலைவர் பாலகிருஷ்ணன்
அருணாசலத்திடம் ஒப்படைத்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றலான
இவ்வாலயத்திற்கு நில உரிமையைப் பெற்றுத் தருவதற்கு ஷா ஆலம்
மாநகர் மன்ற உறுப்பினர் முருகையா முனுசாமி பெரும் முயற்சி
எடுத்துக் கொண்டதாக ரோட்சியா கூறினார்.

இவ்விவகாரம் மாநில அரசு மற்றும் நில அலுவலகத்தின் கவனத்திற்குக்
கொண்டுச் செல்லப்பட்டு பல்வேறு நிர்வாக நடைமுறைகளுக்குப் பின்னர்
ஆலயத்திற்கான நிலம் உறுதி செய்யப்பட்டது என அவர் தெரிவித்தார்.

பத்து தீகா சட்டமன்ற உறுப்பினராக தாம் பொறுப்பேற்றது முதல்
இத்தொகுதியிலுள்ள ஐந்து ஆலயங்களின் நிலப்பிரச்சனைக்குத் தாம் தீர்வு
கண்டுள்ளதாக ரோட்சியா சொன்னார்.

இந்த நிலத்தை பெறுவதற்கு பொறுமையோடு காத்திருந்ததோடு
இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்த அனைத்துத் தரப்பினருக்கும்
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சுங்கை ரெங்கம் தோட்டத்தின் இரண்டாம் டிவிஷனில்
வீற்றிருந்த சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஸ்ரீ சித்தி
விநாயகர் ஆலயம் கடந்த 2017ஆம் ஆண்டு அரசாங்கம் ஒதுக்கீடு செய்த செக்‌ஷன் 18 பகுதிக்கு மாற்றலானதாக ஷா ஆலம் கவுன்சிலர் முருகையா
தெரிவித்தார்.

இந்த ஆலயத்திற்கான நிலத்தை உறுதி செய்வதற்குக் கடந்த 2019ஆம்
ஆண்டு முதல் தாம் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும்
ரோட்சியாவின் ஒத்துழைப்பின் வாயிலாக அதற்கான உறுதிக் கடிதம்
கிடைக்கப் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.


Pengarang :