NATIONAL

நாட்டிலுள்ள 12 நெடுஞ்சாலைகளில் செப்டம்பர் முதல் திறந்த டோல் கட்டண முறை அமல்

கோலாலம்பூர், ஜூன் 16- வாகனமோட்டிகள் தங்களிடம் உள்ள டெபிட்
மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்த
வகை செய்யும் திறந்த கட்டண முறை வரும் செப்டம்பர் மாதம் முதல் 12
நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும்.

இந்த திட்டம் கோலாலம்பூர் அடுக்குச்சாலை (அக்லே), கத்ரி நெடுஞ்சாலை
(ஜி.சி.இ.), சுங்கை பீசி விரைவுச்சாலை (பெஸ்ராயா), புதிய பந்தாய்
விரைவுச்சாலை (என்.பி.இ.), பினாங்கு பாலம் (ஜே.பி.பி.) பட்டர்வெர்த்-
கூலிம் நெடுஞ்சாலை (பி.கே.இ.) ஆகியவற்றில் அமல்படுத்தப்படும் என்று
பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெச்சாண்டர் நந்தா லிங்கி
கூறினார்.

மேலும், டாமன்சாரா- பூச்சோங் நெடுஞ்சாலை (எல்.டி.பி.), ஸ்பிரிண்ட்
நெடுஞ்சாலை, கெசாஸ் விரைவுச்சாலை, ஸ்மார்ட் சுரங்கப்பாதை,
கோலாலம்பூர் –புத்ரா ஜெயா விரைவுச்சாலை, டூத்தா- உலுகிளாங்
விரைவுச்சாலை ஆகியவை இத்திட்டத்தை அமல்படுத்தவுள்ள இதர
நெடுஞ்சாலைகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் கட்டங் கட்டமாக நிறைவேற்றப்படும் என
எதிர்பார்க்கப்படும் பல தட விரைவு டோல் கட்டண வசூல் (எம்.எல்.எப்.எப்.)
முறையின் அமலாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த திறந்த கட்டண முறை
அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :