SELANGOR

விவசாயிகள், மீனவர்கள், கால் நடை வளர்ப்போருக்கு மாநில அரசு வெ.35 லட்சம் மானியம்

ஷா ஆலம், ஜூன் 16- விவசாயிகள், மீனவர்கள், கால் நடை வளர்ப்போர்
மற்றும் கீழ் நிலை விவசாயிகள் (ஐஏ.டி.) ஆகியோரை உள்ளடக்கிய 2,000
பேருக்கு மாநில அரசு 35 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை ஊக்கத்
தொகையாக வழங்கியுள்ளது.

இந்த வருடாந்திர மானியம் 2023ஆம் ஆண்டு உதவி மற்றும் சிறப்புத்
திட்ட செயல்குழுவின் வாயிலாக வழங்கப்பட்டதாக நவீன விவசாயம்
மற்றும் வேளாண் அடிப்படை தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர்
இஷாம் ஹஷிம் கூறினார்.

கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி மட்டுமே
வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டில் அத்தொகையை அதிகரிக்க மாநில
அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

உணவு உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தங்கள் பணிகளை
மேலும் சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பை சமாளிக்கவும் இந்த உதவி நிதி துணை புரியும் என்று தாம்
நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இங்குள்ள லாமான் நியாகா கோஹஜ்ராவில் நேற்று நடைபெற்ற உதவி
நிதி வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைக் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் மலேசிய மீன் வள மேம்பாட்டுத் துறை 675,000
வெள்ளியையும் ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாய பொருள் சந்தை
வாரிய சிலாங்கூர் பிரிவு 100,000 வெள்ளியையும் பெற்றன.

சிலாங்கூர் மாநில உணவு விநியோக திட்ட அமலாக்கத்திற்காக மாநில
அரசு 2023ஆம் ஆண்டில் 79 லட்சம் வெள்ளியை ஒதுக்கீ செய்துள்ளதாக
மந்திரி புசார் கடந்தாண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :