NATIONAL

பொழுதுபோக்கு முகாம் வழிகாட்டியை ஒருமுகப்படுத்தும் திட்டத்திற்கு முகாம் நடத்துநர்கள் ஆதரவு

ஷா ஆலம், ஜூன் 17- பொழுதுபோக்கு முகாம் பகுதிகளில்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டியை
ஒருமுகப்படுத்தும் மாநில அரசின் முயற்சிக்கு முகாம்
நடத்துநர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.

தங்களின் பொழுது போக்கு முகாம் நடவடிக்கைகள் சீராக
நடைபெறுவதற்கு ஏதுவாக கடந்த பிப்ரவரி முதல் பெரும்பாலான முகாம்
நடத்துநர்கள் ஊராட்சி மன்றங்களில் தங்களைப் பதிவு செய்துள்ளதாக
சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்
கூறினார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பொழுதுபோக்கு
முகாம் பகுதிகளுக்கான வழிகாட்டியை உருவாக்க நாங்கள்
விரும்புகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதோடு
பலர் இத்திட்டத்தில் பதிவு செய்தும் வருகின்றனர் என்று அவர்
குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் இன்னும் பதிவு செய்யாத பொழுதுபோக்கு முகாம்
நடத்துநர்கள் விரைந்து பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின்
பணியையும் எளிதாக்கும் என்றார் அவர்.

வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த பிப்ரவரி
1ஆம் தேதி தொடங்கி அனைத்து பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களும்
ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாநில அரசு
உத்தரவிட்டது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பத்தாங் காலி, ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம்
பொழுதுபோக்கு முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 31 பேர்
உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள அனைத்து பொழுதுபோக்கு மையங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கையை மாநில அரசு
மேற்கொண்டது.


Pengarang :