SELANGOR

2011ஆம் ஆண்டு முதல் வெ.12.3 கோடி செலவில் 357 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுசீரமைப்பு

கிள்ளான், ஜூன் 16- “செரியா“ எனப்படும் சமூக நல மாநில மறுசீரமைப்புத்
திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 357 மலிவு
மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகள் 12 கோடியே 37
லட்சம் வெள்ளி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இவ்வாண்டில் இத்தகைய மறுசீரமைப்புத்
திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 லட்சம்
வெள்ளியும் இதில் அடங்கும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சீரான மற்றும் சிறப்பான விண்ணப்ப
முறையுடன் கூடிய மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் சீரமைப்புக்கான
உதவித் திட்டத்தைக் கொண்ட மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது
என்று அவர் சொன்னார்.

தங்கள் குடியிருப்பு பகுதிகளைப் புதுப்பிப்பதற்கு அடுக்குமாடி
குடியிருப்புகளின் கூட்டு நிர்வாக மன்றங்கள் இணையம் வாயிலாக
அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள புக்கிட் திங்கி 1, அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்
நடைபெற்ற அடையாளச் செரியா திட்ட ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளைச் சீரமைப்பது, லிப்ட், குடிநீர்
டாங்கிகளைப் பழுபார்ப்பது, சாயம் பூசுவது தொடர்பான விண்ணப்பங்ளோடு
குடியிருப்புகளின் மேலிருந்து குப்பைகளை வீசுவது போன்ற
புகார்களையும் தாங்கள் பெற்று வருவதாக அவர் கூறினார்.

புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு ஏதுவாக இ-செரியா
முறையின் வாயிலாக விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொண்ட அவர், அனைத்துப் புகார்களுக்கும் கட்டங் கட்டமாகத் தீர்வு காண தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.


Pengarang :