NATIONAL

ஆய்வகத்தில் போலி மருந்துகள் தயாரிப்பு- இரு பெண்கள் கைது

கோலாலம்பூர், ஜூன் 16- பேராக் மாநிலத்தின் தைப்பிங்கில் உள்ள போலி
மருந்து தயாரிக்கும் ஆய்வகம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடிச்
சோதனை நடத்திய போலீசார் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண்
ஆகியோரைக் கைது செய்தனர்.

அந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மருந்து தயாரிக்கும்
சாதனங்களும் சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெறாதவை என
சந்தேகிக்கப்படும் மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக அரசு மலேசிய
போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

சுமார் 64 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மருந்து தயாரிப்பு சாதனங்களும்
மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் இந்த சோதனை
தொடர்பில் 1982ஆம் ஆண்டு மருந்து மற்றும் அழகு சாதன கட்டுப்பாட்டு
விதிமுறைகளின் 7(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையை வைலைஃப் குற்றவியல் மையம்/சிறப்பு
விசாரணை உளவுப் பிரிவு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப்
பிரிவு, சுகாதார அமைச்சு ஆகிய தரப்புகள் ஒன்றிணைந்து
மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

பொது அமைதி மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில்
அமைச்சு மற்றும் அரசு துறைகளுக்கு உதவும் கடப்பாட்டை உள்நாட்டு
பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவு கொண்டுள்ளது என்றும் அவர்
அறிக்கை ஒன்றில் கூறினார்.

இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், குற்றச்செயல்களை முற்றாகத்
துடைத்தொழிப்பதற்கு ஏதுவாக தகவல்களைத் தந்து உதவுமாறு
பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.


Pengarang :