NATIONAL

மாநிலத் தேர்தலில் சுங்கை துவா தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அமிருடின் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூன் 19- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில்
சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டால்
ஏற்கனவே தீட்டப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்ற மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிபூண்டுள்ளார்.

கடந்த மூன்று தவணைகளாகத் தன் வசம் இருக்கும் சுங்கை துவா
சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள இயலும் என்று
நம்பிக்கைத் தெரிவித்த அவர், இதன் மூலம் கோம்பாக்கை மேலும்
சிறப்பான முறையில் வழிநடத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார்.

இறைவன் அருளால் இதுவரை நான் சுங்கை துவாவில் நீடிக்கிறேன்.
இருந்தாலும் அரசியல்வாதிகள் என்ற முறையில் நாம் கட்சித்
தலைமையின் முடிவுகளை ஏற்று நடக்க வேண்டும் என்றார் அவர்.

வசதி மற்றும் செலவழிக்கப்பட்ட நேரத்தை கணக்கிட்டால் சுங்கை
துவாவில் பணியைத் தொடர முடியும் என நம்புகிறேன் என்று நேற்று
இங்கு கித்தா சிலாங்கூர் கல்வி இலக்கு திட்டத்தைத் தொடக்கி வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி, பாஸ் மற்றும்
சுயேச்சை வேட்பாளர்களை 11,374 வாக்குகள் பெரும்பான்மையில்
தோற்கடித்து சுங்கை துவா தொகுதியை அமிருடின் தக்க வைத்துக்
கொண்டார்.

மீண்டும் மாநில மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதா
என நிருபர்கள் வினவிய போது, இந்த விவகாரம் தொடர்பில்
முடிவெடுக்கும் பொறுப்பை தாம் கட்சித் தலைமைத்துவத்திடம்
ஒப்படைத்து விடுவதாக அமிருடின் சொன்னார்.

மந்திரி புசாராக பெயர் குறிப்பிடப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள தாம்
தயாராக உள்ளதோடு அப்பொறுப்பினை சிறப்பாக ஆற்றுவதற்கும்
தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :