SELANGOR

நாட்டின் பொருளாதாரச் சக்தியாக விளங்கும் சிலாங்கூர் மூலம் பிற மாநில மக்களுக்கும் பயன்

ஷா ஆலம், ஜூன் 19- நாட்டின் பொருளாதார உந்து சக்தியாகச் சிலாங்கூர்
தொடர்ந்து விளங்கி வருகிறது என்பதற்கு 2023 சிலாங்கூர் மெகா வேலை
வாய்ப்பு கண்காட்சியின் வெற்றி சிறந்த சான்றாக விளங்குகிறது.

இந்த வேலை கண்காட்சி சிலாங்கூர் மாநில மக்களுக்கு மட்டுமின்றி
வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயன் தந்துள்ளதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் உள்ளுர்வாசிகள் மட்டும் பங்கு
கொள்ளவில்லை. மாறாக, இங்கு குடிபெயர்ந்தவர்களும் இதில் கலந்து
கொண்டனர். பொருளாதார உந்து சக்தி என்பதை இது அங்கீகரிக்கிறது
என்றார் அவர்.

இத்தகைய வேலை வாய்ப்புச் சந்தைகளை நடத்துவதன் மூலம்
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில்
புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம் என்று அவர் மேலும்
சொன்னார்.

இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நேற்று
நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியை நிறைவு செய்து வைத்து
உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாநிலத்தில் வேலையின்மை விகிதம் சரிவு கண்டுள்ளதை குறிப்பிடத்தக்க
சாதனை என வர்ணித்த அமிருடின், பொருளாதார அமைப்புகளின்
அடிப்படையில் சிலாங்கூர் ஆக்ககரமான மாநிலமாக விளங்குவதை
பிரதிபலிக்கிறது என்றார்.

இந்த மெகா வேலை வாய்ப்புச் சந்தையில் சேவை, வாகனம், உபசரணை,
சுற்றுலா உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
பங்கு கொண்டன.


Pengarang :