NATIONAL

தேர்தல் பிரசாரத்தில் மத, இன விவகாரங்களை எழுப்பாதீர்- வேட்பாளர்களுக்குச் சிலாங்கூர் சுல்தான் நினைவுறுத்து

கிள்ளான், ஜூன் 19- தேர்தல் பிரசாரத்தின் போது இன மற்றும் மத
விவகாரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று விரைவில்
நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும்
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு மேன்மை தங்கிய
சிலாகூர் சுல்தான் நினைவுறுத்தியுள்ளார்.

மாநில மக்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை
ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிகரமான விஷயங்களையும் தொட வேண்டாம்
என அத்தரப்பினரை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கேட்டுக்
கொண்டார்.

தேர்தலின் போது விவேகத்துடனும் பொறுப்புணர்வுடனும் சட்டத்திற்கு
உட்பட்டும் பிரசார நடவடிக்கைளில் ஈடுபடும்படி வேட்பாளர்கள் மற்றும்
அவர்களின் ஆதரவாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

பல்லின மக்கள் வாழும் இந்த மாநிலத்தில் பிளவுகள் ஏற்படுவதைத்
தவிர்ப்பதற்காக எதிரணியினர் பற்றி தரக்குறைவாக பேசுவது, அவதூறு
பரப்புவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனவும் நான்
வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷா, அரச மண்டபத்தில் சிலாங்கூர்
சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடும்
நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று காலை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியைச்
சந்தித்த மேன்மை தங்கிய சுல்தான், மாநிலத் தேர்தலுக்கு வழி விடும்
வகையில் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு ஒப்புதல் வழங்கினார்.


Pengarang :