SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பு

அம்பாங் ஜெயா, ஜூன் 19- இன்று இங்கு நடைபெற்ற லெம்பா ஜெயா
தொகுதி நிலையிலான மலிவு விற்பனையில் 500 கோழிகளும் 300
பாக்கெட் இறைச்சியும் சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

இந்த விற்பனையில் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
வழங்கப்பட்ட வேளையில் வரிசை எண்களைப் பெறுவதற்காகப் பொது
மக்கள் காலை 7.00 மணி முதல் வரிசையில் காத்திருக்கத்
தொடங்கியதாகத் தொகுதி சேவை மையத்தின் அதிகாரி நுராப்சான்
இஸ்மாயில் கூறினார்.

பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த மலிவு
விற்பனையை அடிக்கடி நடத்த முயற்சி செய்கிறோம். எனினும்,
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)
விற்பனை அட்டவணையைப் பொறுத்தே இது சாத்தியமாகும் என அவர்
சொன்னார்.

தாமான் அம்பாங் இண்டா சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனையில் கோழி மற்றும் இறைச்சி தவிர்த்து, பி கிரேட் முட்டை,
கெம்போங் மீன், சமையல் எண்ணெய் மற்றும் அரிசி ஆகியவையும்
பொது மக்களின் தேர்வுக்குரிய பொருள்களாக விளங்கியதாக அவர்
குறிப்பிட்டார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனையில் சந்தையை விட 30 விழுக்காடு
குறைவான விலையில் ஆறு விதமான அத்தியாவசிய உணவுப்
பொருள்கள் விற்கப்படுகின்றன.


Pengarang :