NATIONAL

பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த அனைவரும் ஒரே குழுவாகச் செயல்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 20-
பன்னிரண்டாவது மலேசியத்
திட்டத்தின் மத்திய தவணைக்கான
மறு ஆய்வு மீதானக் கூட்டத்திற்குப்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

புத்ரா ஜெயாவில் நேற்று நடைபெற்ற
இந்த சிறப்பு கூட்டத்தில் அனைத்து
அமைச்சர்களும் அமைச்சுகளின்
தலைமைச் செயலாளர்களும் கலந்து
கொண்டனர்.

திட்டமிடப்பட்ட சமூகப் பொருளாதார
திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள்
விரைவாக அமலாக்கம் காண்பதற்கு
ஏதுவாக அனைவரும் ஒரே குழுவாக
செயல்பட வேண்டும் என இந்த
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நடப்பு சமூகப் பொருளாதார
மாற்றங்கள் மற்றும் சவால்களைக்
கருத்தில் கொண்டு மக்களின்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில்
அரசாங்கம் முழு அக்கறை செலுத்தி
வருவதை பன்னிரண்டாவது
மலேசியத் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மறு ஆய்வு
புலப்படுத்த வேண்டும் என்று
நிதியமைச்சருமான அன்வார்
கேட்டுக் கொண்டார்.

மத்திய தவணைக்கான மறு ஆய்வை
தயார் செய்வதில் அனைத்து
அமைச்சர்களின் கருத்துகளும் கவனத்தில்
கொள்ளப்படும் என்று அவர் தனது
முகநூல் பதிவில் தெரிவித்தார்.

கொள்கை அமலாக்க விவகாரங்களில்
குறிப்பாக, மக்கள் நலன் சார்ந்த
அம்சங்களில் அனைத்து
அமைச்சர்களும் ஆக்ககரமாகவும்
தீவிரமாகவும் செயல்பட வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தினார்.

பன்னிரெண்டாவது மலேசியத்
திட்டத்தின் மத்திய தவணைக்கான
மறு ஆய்வில் சமர்ப்பிக்கப்பட
வேண்டிய இலக்குகளை குறித்து
விவாதிப்பதற்காக இந்த சிறப்பு
கூட்டம் நடத்தப்பட்டதாகப் பிரதமர்
குறிப்பிட்டார்.


Pengarang :