SELANGOR

மாநில அரசு தெளிவான மேம்பாட்டு இலக்கைக் கொண்டுள்ளதை முதலாவது சிலாங்கூர் திட்டம் நிரூபிக்கிறது

ஷா ஆலம், ஜூன் 20- மக்களின் சுபிட்சமான வாழ்வுக்காகத் தெளிவான
இலக்குகளை நடப்பு மாநில அரசு நிர்வாகம் கொண்டுள்ளது என்பதற்கான
சான்றுகளில் ஒன்றாக மாநிலத்தின் மேம்பாட்டு கட்டமைப்பாக விளங்கும்
முதலாவது சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) திகழ்கிறது.

முதலாவது சிலாங்கூர் திட்டம் தவிர்த்து, மக்களின் நலனை மையமாகக்
கொண்டு கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பு மற்றும் இல்திஸாம்
சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) ஆகிய திட்டங்களும்
அமல்படுத்தப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

திரட்டப்பட்டத் தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான
திட்டமிடலை நாம் கொண்டுள்ளோம் என்பதற்கு முதலாவது சிலாங்கூர்
திட்டம் உதாரணமாக விளங்குகிறது. அதோடு மட்டுமின்றி நாட்டின்
பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலமாகச்
சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதற்கு ஏதுவாக நெருக்கடிகளை
விவேகத்துடனும் ஆக்ககரமான முறையிலும் கையாண்டு வருகிறோம்
என்றார் அவர்.

பகுதி நேர பொருள் விநியோகிப்பாளர்கள், பிரத்தியேகக் குழந்தைகள்
மற்றும் விரிவான கல்வித் திட்டங்களை உள்ளடக்கிய 46 திட்டங்கள் நமது
சமூக நலக் கொள்கையின் வழி விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவர்
மேலும் சொன்னார்.

வீட்டுடைமைத் திட்டங்கள், கலாசாரம், சிலாங்கூர் நீர் உத்தரவாதத்
திட்டம், சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விவேக கார்
நிறுத்தக் கட்டண வசூல் முறை ஆகியவை இதில் உள்ளடங்கவில்லை
என்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


Pengarang :