NATIONAL

எஸ்.பி.எம். தேர்வை தனிப்பட்ட முறையில் எழுதும் மாணவர்களுக்கான பதிவு நாள் ஜூன் 30 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜூன் 20: இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை
தனிப்பட்ட முறையில் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி
நாள் இம்மாதம் 30ஆம் தேதி மாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுதத் தவறிய சுமார் 30,000
மாணவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் இந்த
காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகக் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில்
தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய
தேர்வு மேலாண்மை முறையின் மூலம் sppat.moe.gov.my என்ற இணைப்பின்
வழி மேற்கொள்ளப்படுகிறது என அது கூறியது.

தேர்வு எழுதும் மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை
முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு அடிப்படைக் கட்டணம்
மற்றும் தேர்வில் எடுக்கவிருக்கும் பாடங்களுக்கான கட்டணத்தையும்
செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு எஸ்.பி.எம்.தேர்வை எழுதிய மாணவர்கள்
தாமதமாக விண்ணப்பம் செய்ததற்கான கட்டணத்தைச் செலுத்த
வேண்டியதில்லை. எனினும், கடந்தாண்டு தனிப்பட்ட முறையில் தேர்வு
எழுதிய மாணவர்கள் நடப்பிலுள்ள அனைத்து நிபந்தனைகளையும்
பின்பற்ற வேண்டும்.

இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை தனிப்பட்ட முறையில் எழுதும்
மாணவர்களுக்கான பதிவு தொடர்பான மேல் விபரங்களை Ip.moe.gov.my
என்ற தேர்தல் வாரியத்தின் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :