NATIONAL

நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பயணம் செய்து மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 20- சுங்கை பீசி-உலு கிளாங் அடுக்கு விரைவுச்
சாலையில் எதிர் திசையில் பயணம் செய்து மரண விபத்து ஏற்படுவதற்குக்
காரணமான மோட்டார் சைக்கிளோட்டியிடம் போலீசார் வாக்குமூலம்
பதிவு செய்துள்ளனர்.

இம்மாதம் 14ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயர்சக்தி கொண்ட
மோட்டார் சைக்களின் ஒட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பில் சுங்கை பீசி—உலுகிளாங் நெடுஞ்சாலை மற்றும்
டூத்தா- உலு கிளாங் நெடுஞ்சாலையின் கண்காணிப்பு கேமரா
மேற்பார்வையாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக
அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏபிபி முகமது அஸாம்
இஸ்மாயில் கூறினார்.

அந்த மோட்டார் சைக்கிளோட்டியின் உடல் நிலை தற்போது சீராக இருந்து
வருவதோடு தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார் என்று அவர்
சொன்னார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும்
புஸ்பாகோம் மற்றும இரசாயன இலாகாவின் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை முற்றுப் பெற்றவுடன் மேல்
நடவடிக்கைக்காக அது சிலாங்கூர் மாநிலத் துணை சட்டத்துறைத் தலைவர்
அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

கடந்த ஜூன் 14ஆம் தேதி அந்த நெடுஞ்சாலையில் பயணித்துக்
கொண்டிருந்த அகமது பாட்சில் அஸாடின் (வயது 64) என்ற ஆடவர்
எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முயன்ற போது
கட்டுப்பாட்டை இழந்து அடுக்குச் சாலையின் 30 மீட்டர் உயரத்திலிருந்து
விழுந்து உயிரிழந்தார்.


Pengarang :