SELANGOR

சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும் செப்டம்பர் வரை மலிவு விற்பனைத் தொடரும்

ஷா ஆலம், ஜூன் 20- வரும் வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநில
சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும் சிலாங்கூர் மாநில விவசாய
மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் நடைபெறும் மலிவு
விற்பனைக்கு எந்த பாதிப்பும் வராது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும்
நோக்கிலான இந்த ரஹ்மா ஏசான் மலிவு விற்பனைத் திட்டம்
மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்படும்
என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இஷாம் ஹஷிம் கூறினார்.

இதற்கான திட்டம் வரைப்பட்டு விட்டதோடு மாநிலச் சட்டமன்றம்
கலைக்கப்பட்டாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த திட்டத்தை
நாங்கள் நிச்சயம் தொடர்வோம். குடும்பச் செலவினத்தைக் குறைக்க
மாநில அரசின் இந்த திட்டம் துணை புரிகிறது என அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் மூலம் பலர் பயன்பெறுவதால் இதனை அவசியம்
தொடர வேண்டும். ஹாஜ்ஜூப் பெருநாளின் போது பொது மக்கள்
அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு
விற்பனைக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றார் அவர்.

மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர்
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நேற்று அறிவித்திருந்தார்.


Pengarang :