NATIONAL

புதிதாகப் பிரசிவித்த குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் மாணவி விடுவிப்பு

புத்ராஜெயா, ஜூன் 21- புதிதாகப் பிரசவித்த தன் ஆண் குழந்தையைக்
கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் கல்லூரி மாணவி ஒருவருக்கு
விதிக்கப்பட்ட மரண தண்டனையை இங்குள்ள மேல் முறையீட்டு
நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான மூவர் கொண்ட
மேல் முறையீட்டு நீதிபதிகள் குழு வழங்கிய இந்த தீர்ப்பைக் கேட்டதும்
நுர் இஸாத்தி அடி (வயது 26) என்ற அந்த மாணவியின் கண்களில்
ஆனந்தம் தாளாது கண்ணீர் பெருகியது.

கொலைக் குற்றச்சாட்டிற்குப் பதிலாக மரணத்திற்கு காரணமாக இந்ததாக
குற்றச்சாட்டை மாற்றுவதற்கு நுர் இஸாத்தி செய்து கொண்ட
விண்ணப்பத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாகச் சட்டத் துறை தலைவர்
அலுவலகம் நீதிமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த
தீர்ப்பை வழங்கியது.

தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டை நுர் இஸாத்தி
ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒன்பது ஆண்டுச்
சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை அப்பெண் கைது
செய்யப்பட்ட தினமான 2017ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முதல்
அமலுக்கு வருவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்த தீர்ப்பின் எதிரொலியாக மனுதாரர் உடனடியாக விடுவிக்கப்படுவதாகக்
கூறிய நீதிபதி டத்தோ ஹடாரியா, அவரின் கைவிலங்குகளை
அகற்றும்படி சிறை வார்டன்களுக்கு உத்தரவிட்டதோடு இனி நீங்கள்
சுதந்திரமாக நீதிமன்றத்தை விட்டு வெளியேறலாம் எனவும் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி மாலை 5.20 மணியளவில்
புக்கிட் காயு ஹீத்தாம் மலேசிய விவசாய கல்லூரியின் மாணவர் தங்கும்
விடுதியின் கழிப்பறையில் தாம் புதிதாக ஈன்றெடுத்த குழந்தையை கொலை செய்ததாகக் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :